Saturday 3 March 2012

குபேரன் - தீபாவளி




          தீபாவளிப் பண்டிகையின் போது வட இந்தியாவில் பலர் ஸ்ரீலக்ஷ்மியுடன் குபேரனையும் பூஜிக்கிறார்கள். குபேரனின் பூஜை அநேகமாக அக்டோபர் 15 தேதியிலிருந்து நவம்பர் 15 தேதிக்குள் ஐப்பசி மாதம் வரும், அதுவும் வியாழன்று பூசம் நக்ஷத்திரம் சேர்ந்தால் மிகச்சிறந்த நாளாகச் சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டிலும் லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை, யந்திரத்துடன் சில ஆன்மீகக் கடைகளில் கிடைக்கிறது. 
 
        குபேரன் செல்வத்திற்கு அதிபதி. திருப்பதி வெங்கடாசலபதியே தன் திருமணத்திற்குக் குபேரனிடமிருநது கடன் வாங்கிக் கொண்டார் என்று புராணம் கூறுகிறது. 

       இவர் ஒரு யக்ஷன் என்றும் வைஸ்ரவாவின் மகன் என்றும் தெரிய வருகிறது. இவருடைய மாற்றாந்தாய்க்குப் பிறந்தவர் தான் இராவணன். இவருடைய தாத்தா புலஸ்தியர் பிரும்மாவின் புத்திரர். முத்லில் இலங்கைக்கு அதிபதியாக இருந்தவர் குபேரனே.
        குபேரனின் விமானம் பறக்கும் போது தங்கம், முத்து போன்றவைகளைச் சிதறியபடியே செல்லுமாம். இராவணன் குபேரனை நாட்டை விட்டு விரட்டியப்பின் குபேரன் சிவனை நோக்கிக் கடும்தவம் புரிந்தார். அவரின் தவத்தை மெச்சி சிவனும் பார்வதியுடன் காட்சி கொடுத்தனர். பார்வதியின் அழகில் ஒரு நிமிடம் மயங்கி "ஆஹா, என்ன அழகு! இத்தனை அழகான தேவியைப் பார்த்ததேயில்லை" என்று கண் சிமிட்டினார் குபேரன். இதை எதிர்ப்பார்க்காத பார்வதி கோபத்துடன் அந்தக் கண்ணை வெடிக்கச் செய்தாள்.
ஒரு கண் போன பின் குபேரன் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க அந்த இடத்தில் ஒரு சிறிய கண்ணைக் கொடுத்து பார்வதி குபேரனை மன்னித்தாள். அவருடைய சிவ பூஜை, கடும் தவம் காரணத்தினால் அவரை அஷ்டதிக்குக் காவலர்களில் ஒருவராகவும் நியமித்தார். இவர் வடக்கு திசைக்கு அதிபதி. லக்ஷ்மி தேவியும் குபேரனை தனதான்யத்திற்கு அதிபதியாக்கி அவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை அளித்தாள் .
            குபேரனைச் சித்திரங்களில் குள்ளமாகவே காண்கிறோம் சிவந்த நிறம். பெரிய தொந்தி, அணிந்திருக்கும் உடை முழுவதும் தங்கத்தினால் ஆனதாம். உடல் முழுவதும் ஆபரணங்கள், கையிலே காசுகள் நிரம்பிய ஒரு பை, மற்றொரு கையில் கதை. புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை 'சர்வானுபூதி" என்று வழிபடுகின்றனர். இவர் கையில் மது நிரம்பிய கலசம் இருக்குமாம்.
குபேரனின் சரித்தர ஆய்வில் சில இடங்களில் அவருக்கு மூன்று கால்களும், எட்டு பற்களும் ஒற்றைக் கண்ணும் கொண்டவராக இருக்கிறாராம். இவருக்கு வாகனமாக ஒரு மனிதனே இவரைத் துக்கியபடி இருக்கிறான்.
          அக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம்.
         சில திபெத்திய சித்திரங்களில் கீரிபிள்ளையுடன் இவர் காணப்படுகிறார். கீரி குபேரனின் வெற்றிச் சின்னம் என்று திபெத்தியர்கள் கூறுகிறார்கள். சீனாவின் வாஸ்துவில் சிரிக்கும் புத்தா என்ற பெயரில் தொந்தியும் தொப்பையுமாக சிரித்த முகத்துடன் ஒரு சிலை கிடைக்கும் இந்தப் பொம்மைச் சிலை பலவிதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒன்றில் பணம் மடியில் கொட்டும் ஒன்றில் தன் இரு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டிருப்பது போல இருக்கும். இதுவும் குபேரன் தான் என்று சிலர் சொல்கிறார்கள். பல வியாபார ஸ்தலங்களிலும் சில வீடுகளிலும் இவர் வடக்கு திசையில் அலங்காரப் பொருளாக அமர்ந்திருந்தாலும் அதிருஷடம் வீடு தேடி வரும் என்ற நம்பிக்கையும் அதில் சேர்ந்திருக்கும். குபேரனின் அருள் பெற்றால் நல்ல மனோபலம் செல்வம். வளம் வியபாரத்தில் லாபம் என்று பல நன்மைகள் கிடைக்கப் பெறுவோம்.
     குபேரனின் படத்துடன் லக்ஷ்மியையும் சேர்த்து குபேர யந்திரத்துடன் 48 நாள் பூஜிக்க பணம் கொட்டும். குபேரனுக்கென்று மிகவும் ஒரு சில கோயில்கள் தான் உண்டு. இதில் ரத்னமங்கலம் என்ற இடத்தில் குபேரனுக்குக் கோயில் ஒரு கோயில் காண முடிகிறது. இது மிகப்பழமையான கோயில். சுமார் ஐநூறிலிருந்து ஆயிரம் வருடம் பழமையானதாக இருக்கலாம். இங்கு லக்ஷ்மி குபேரனுக்கு தீபாவளியின் போது சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் இந்தக் கோயிலில் எங்குத் திரும்பினலும் ரூபாய் நோட்டினால் மாலைகள் தோரணங்கள் என்று அலங்கரிக்கப்பட்டு குபேரனின் செல்வ வளத்தைக் காட்டுகிறது. கூட்டம் க்யூவைப் பார்த்தால் பாம்பு போல் வளைந்து நீண்டு போகிறது. பொறுமையுடன் நின்றால் மிக அழகான குபேர தரிசனம் கிடைக்கும்.
அங்குப் போனவுடன் நூறு ரூபாய்க்குச் சீட்டு வாங்கினால் ஒரு முறத்தில் பச்சைத்துணி, பூஜைப்பொருட்கள், ஒரு விளக்கு, லக்ஷ்மி குபேர படம் எல்லாம் கிடைக்கும். இத்துடன் மேலே நடக்க ஒரு மீன் குளம் வரும். அந்த்க் குளத்தில் இருக்கும் மீன்கள் 'வாஸ்து' மீன்களாம். அந்த மீன்கள் வீட்டிற்கு நல்லது செய்யும் என்று நம்பப்படுகிறது. அந்தக் குளத்தின் அருகில் ஆதிசங்கரர் அமர்ந்து அருள் புரிகிறார்.
           பின் நாம் பார்ப்பது கண்திருஷ்டி விநாயகர்.
"ஏ பிள்ளையாரப்பா! உன் அருள் கிடைக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தபடியே மேலே நடந்தால் வலது பக்கம் நவக்கிரஹங்கள் இடது பக்கம் பாதாள குபேர லிங்கம் என்று காண முடிகிறது. பாதாள குபேர லிங்கத்திற்குள் குனியாமல் நுழைந்தால் நம் தலையைப் பதம் பார்த்து விடும். பின் வருவது ஆஞ்சநேயர். இவைகள் எல்லாம் பார்த்த பின் விளக்கு ஏற்றும் இடம் வர அங்கு நெய்விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
       முக்கிய சன்னதியான குபேர சன்னதிக்குப் போக அங்கு குபேரன் தங்க உடைகள் அணிந்து ஜவலிக்கிறார். அவர் மேல் ரூபாய் நோட்டினல் மாலைகள் அலங்கரிக்கின்றன. குபேரனின் மனைவி ரித்தியும் கூட அமர்ந்து அருள் புரிகிறாள்.    குபேரன் சன்னதியை நெருங்க அர்ச்சகர் தட்டில் ஐந்து ரூபாய் காசுகள் தனித்தனியாக எடுத்து கைநிறைய அள்ளியது போல் போடவேண்டும். அர்ச்சகரும் தீபாராதனைக் காட்டிவிட்டு ஒரு சிரிக்கும் புத்தாவும் laughing buddha. ஒரு ரூபாய் காசும் நமக்கு தருகின்றன. அதுவே நமக்குக் கிடைக்கும் பிரசாதம். இது சில வருடங்கள் முன் நடந்த விவரம், தற்போது சில மாறுதல்கள் வந்திருக்கலாம்
பின் சுற்றுப்பிரகாரத்தில் நாம் பார்ப்பது வெங்கடாசலபதி, ஸ்வரண ஆகர்ஷண பைரவர் பிரும்மா சரஸ்வதியுடன், ஐய்ப்பன், முருகன், அருகே ஒரு கோசாலாவையும் காணலாம்.
        வண்டலூரிலிருந்து சுமார் ஏழு கி.மீ. தூரம் சென்றால் இந்த லக்ஷ்மி குபேரர் கோயிலை அடையலாம். இநநாளில் குபேரன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.  


ஆன்மிக துளிகள்.





No comments:

Post a Comment

Seriale online